thirukural

புதன், 9 பிப்ரவரி, 2011

சபரிமலை வளர்ச்சி பணிக்காக 500 கோடி ரூபாய் திட்டம்


சபரிமலையில் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விவாதித்து முடிவெடுக்க, இரண்டு வாரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என, கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். அங்கு, ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின்அடிப்படை வசதிகளை மேம்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.



இந்நிலையில், இவ்வாண்டு மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களில் 106 பேர், புல்மேடு பகுதியில் நெரிசலில் சிக்கி பலியாகினர். இச்சம்பவம் குறித்து, தற்போது விசாரணை நடந்து வருகிறது. பக்தர்களுக்குப் போதுமான வசதிகள் சபரிமலையில் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், பல ஆண்டுகளுக்கு முன்னரே ஐகோர்ட் அறிவித்த பல்வேறு அறிவுரைகளை, தேவஸ்வம் போர்டும் மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காகவும், நெரிசல் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யவும், தற்போது தேவஸ்வம் போர்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாயில் மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவாதிக்க இன்னும் இரு வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.சபரிமலையில், பிரசாதம் வினியோகிக்கும் மையம் உட்பட பல்வேறு வசதிகள் குறித்தும், அவற்றை அடுத்த மகரஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்பே முடித்து விடவும் கூட்டத்தில் ஆராயப்படும். திட்டங்களை செயல்படுத்தவும், அதற்கான தொகையை எவ்வாறு பெறுவது போன்றவை குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என, மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்