thirukural

புதன், 9 பிப்ரவரி, 2011

சபரிமலை வளர்ச்சி பணிக்காக 500 கோடி ரூபாய் திட்டம்


சபரிமலையில் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விவாதித்து முடிவெடுக்க, இரண்டு வாரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என, கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். அங்கு, ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின்அடிப்படை வசதிகளை மேம்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.



இந்நிலையில், இவ்வாண்டு மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களில் 106 பேர், புல்மேடு பகுதியில் நெரிசலில் சிக்கி பலியாகினர். இச்சம்பவம் குறித்து, தற்போது விசாரணை நடந்து வருகிறது. பக்தர்களுக்குப் போதுமான வசதிகள் சபரிமலையில் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், பல ஆண்டுகளுக்கு முன்னரே ஐகோர்ட் அறிவித்த பல்வேறு அறிவுரைகளை, தேவஸ்வம் போர்டும் மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காகவும், நெரிசல் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யவும், தற்போது தேவஸ்வம் போர்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாயில் மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவாதிக்க இன்னும் இரு வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.சபரிமலையில், பிரசாதம் வினியோகிக்கும் மையம் உட்பட பல்வேறு வசதிகள் குறித்தும், அவற்றை அடுத்த மகரஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்பே முடித்து விடவும் கூட்டத்தில் ஆராயப்படும். திட்டங்களை செயல்படுத்தவும், அதற்கான தொகையை எவ்வாறு பெறுவது போன்றவை குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என, மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்

சனி, 22 ஜனவரி, 2011

சபரிமலை; இனி என்ன செய்யவேண்டும்?

சபரிமலை 


பெரியாறு புலிகள் சரணலாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சபரிமலை அமைந்துள்ளது. முன்பு மகரவிளக்கு திருவிழா மட்டுமே இங்கு நடந்தது. ஆரம்பத்தில் தமிழ்நாடு, கேரள பக்தர்கள் மட்டுமே வந்தனர். நாளடைவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்தும் பக்தர்கள் வர தொடங்கினர். இதனால் கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாள் மண்டலகாலம் தொடங்கப்பட்டது. பின்னர் மாதபூஜை, சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற நாட்களிலும் நடை திறக்கப்பட்டது. என்றாலும் மண்டல - மகரவிளக்கு காலத்தில்தான் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். சபரிமலையை நிர்வகித்து வருவது திருவிதாங்கூர் தேவசம்போர்டு. இதன் கீழ் உள்ள பிற கோயில்களுக்கு, சபரிமலை வருமானம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம். அடுத்ததாக ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் இடம் பெறுகின்றனர். பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காமல் இருக்க தேவசம்போர்டு காரணம் சொல்வதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டவிலை. சபரிமலையில் சீசன் நேரத்தில் கிடைக்கும் 200 கோடி ரூபாய் வருமானத்துடன், பக்தர்கள் கேரளா வழியாக பயணம் செய்வதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்பதை கேரள அமைச்சர்களே பலமுறை ஒப்புக்கொண்டு விட்டனர். எனினும் சபரிமலை விஷயத்தில் போதுமான கவனமின்மைதான் அடிக்கடி உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது.

அரசின் அலட்சியம்: புல்மேடு விபத்தை பொறுத்த வரை கேரள அரசின் அலட்சியம்தான் காரணம். போதிய வெளிச்சம் இல்லாததால் கீழே விழுந்தவர்களை பக்தர்களே மிதித்து கொன்ற சம்பவம் மிகவும் பரிதாபகரமானது. புல்மேட்டில் யானையும், புலிகளும் சாதாரணமாக நடந்து செல்லும் என்பதால் இங்கு மின் இணைப்பு தர வனத்துறை அனுமதி அளிப்பதில்லை. அப்படியானால் பல லட்சம் பக்தர்களை இங்கு இரவு நேரத்தில் கூட அனுமதித்தது எப்படி என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி. 1999ல் பம்பையில் நடைபெற்ற விபத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சந்திரசேகர மேனோன் கமிஷன் அளித்த அறிக்கையில், பம்பை போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மகரஜோதி தரிசிக்க பக்தர்கள் அதிகமாக கூடும் புல்மேட்டில் தேவையான ரோடு, மின்சாரம், குடிநீர், பாதுகாப்பு போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவைகிடப்பில் போடப்பட்டது.

இந்த ஆண்டு கடும் கூட்டம்: இந்த ஆண்டு, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 12 முதல் 18 மணி நேரம் வரை கியூவில் நிற்க வேண்டிய நிலையில் கியூவை உடைக்கும் முயற்சியில் பல முறை பக்தர்கள் ஈடுபட்டனர். இதிலும் ஒரு வேடிக்கை நடைபெற்றது. கேரள பக்தர்களாக இருந்தால் அவர்களை கியூ இல்லாமல் தனி வழியில் செல்ல அனுமதித்தார்கள். ஆனால், பிற மாநில பக்தர்களுக்கு போலீசார் இந்த சலுகையை வழங்க மறுத்தனர். இந்த சீசனில் பல நாட்களிலும், வழக்கத்திற்கு மாறாக நான்கு மணி நேரம் மட்டுமே கோயில் நடை அடைக்கப்பட்டது. அதுபோல பம்பை முதல் சன்னிதானம் வரையிலான கல், மண் பாதை முழுக்க முழுக்க கான்கிரீட் பாதையாக மாற்றப்பட்டு விட்டது. பல மாற்றங்களை கொண்டு வந்த தேவசம்போர்டு பக்தர்கள் கியூ வில் நிற்கும் நேரத்தை குறைக்க ஆவன செய்யவே இல்லை.சபரிமலையில் ஆச்சார விதிகளுக்கு உட்பட்டு கோயில் நடை திறந்து அடைக்கும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்பதை யோசிக்குமா அரசு?

நெரிசலை தவிர்க்க வழி :* பக்தர்கள் அதிக அளவில் வருவதால், அவர்களுக்கு உதவுவதற்காக அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களை நியமித்து உதவி மையங்கள் செயல்பட வேண்டும்.
* 12 முதல் 18 மணி நேரம் வரை கியூவில் நிற்கும் பக்தர்களுக்காக திருப்பதி மாடலில் கியூ காம்ப்ளக்ஸ் உருவாக்கப்பட வேண்டும்.
* மண்டல- மகரவிளக்கு காலத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க வசதியாக, நடை திறக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி யோசிக்க வேண்டும்.
* தேவசம்போர்டுக்கு வருமானம் மட்டுமே குறியாக இருந்தால், திருப்பதி மாடல் போல ஒரு பக்தருக்கு கட்டணம் நிர்ணயித்து தரிசன நேரத்தை குறிப்பிட்டு அனுப்ப முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.
* முக்கிய வழிபாடு நெய்யபிஷேகம் என்பதால் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை பெற்றுக்கொண்டு அபிஷேகம் செய்த நெய்யை 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சன்னிதானத்தில் நெரிசல் குறையும்.
* மகரவிளக்கு நாளில் எவ்வளவு பக்தர்களை எங்கெங்கு அனுமதிக்க வேண்டும்? அந்த இடங்களில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும்? என்பதை முன்கூட்டியே முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.
* சபரிமலையில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வசதியாக வனத்துறையின் தடைகளை மத்திய அரசின் உதவியுடன் அகற்ற வேண்டும்.
* நிலக்கல்லை இளைப்பாறும் இடமாக மாற்ற முயற்சிக்கும் தேவசம்போர்டு, அங்கிருந்து பக்தர்களை இடைவெளி விட்டு அனுப்புவது பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பிற மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்.
* பம்பையில் கூடுதல் பார்க்கிங் வசதிகள் செய்வும், சபரிமலை வரும் அனைத்து ரோடுகளை அகலபடுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படி அகலம் கூட்ட முடியாது : தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: மகர விளக்கு நாளில் கூடும் பக்தர்களை கட்டுப்படுத்துவதும், ஒழுங்கு படுத்துவதும் போலீசின் கடமை. பக்தர்கள் ஜோதி தரிசனம் நடத்தியதும், வேகத்தில் வீடு திரும்ப முயற்சிக்க கூடாது. பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். பத்து நாட்கள் திருவிழா நடைபெறும் போது பக்தர்கள் வருவது கிடையாது. மாத பூஜையின் போது முதல் இரண்டு நாட்கள் தான் வருகின்றனர். மண்டல- மகரவிளக்கு காலத்தில்தான் அதிகமாக சபரிமலை வர விரும்புகின்றனர். அதனால் நடை திறக்கும் நாட்களை அதிகரிப்பதால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. "கியூ' வில் நிற்கும் நேரத்தை குறைப்பதற்காக 18-ம் படியின் அகலத்தை கூட்ட முடியாது. அது ஆச்சாரங்களுக்கு எதிரானது. புல்மேடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாங்கள் ஐயப்பனிடம் பிரார்த்திக்கிறோம். யார் என்ன கருத்து கூறினாலும் புல்மேடு சம்பவம் சபரிமலை வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். போதிய வெளிச்சம் இல்லாமல் ஒருவரை ஒருவர் மிதித்து கொன்ற சம்பவம் கொடுமையானது. இதற்கு யார் பொறுப்பு என்ற விவாதத்தை விட்டு விட்டு வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

புல்மேடில் புல் மட்டும் தான் இருக்கிறது; வசதி இல்லாத இடத்தில் 3 லட்சம் பேர் : 1999ல் பம்பை நெரிசலில் 53 பேர் பலியான சம்பவத்திற்கு தீர்வு காண, சபரிமலையில் இருந்து 7 கி.மீ., தூரமுள்ள புல்மேடு பகுதியில் இருந்து மகரஜோதியை காணலாம் என்ற கருத்து அப்போது எழுந்தது. புல்மேடு வழியாக சென்றால், குமுளியில் இருந்து 46 கி.மீ., தூரத்தில் சன்னிதானத்தை அடையலாம். 30 ஆண்டுகளுக்கு முன் புல்மேட்டில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள உப்புபாறை பகுதியில், மரங்களை கொண்டு வருவதற்காக புதியதாக ஜீப் பாதை அமைக்கப்பட்டது. வள்ளக்கடவு வரை அமைக்கப்பட்ட ஜீப் பாதைதான் தற்போது பக்தர்களின் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. புல்மேடு வனப்பகுதி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 25 ஏக்கர் ஒரே சீரான புல்வெளியுடன் அமைந்த மலைப்பகுதி. இப்பகுதியில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து மகரஜோதியை தரிசனம் செய்யலாம் என்ற நிலை இருந்தாலும் வனவிலங்குகள் தொந்தரவும் மிகச் சரிவான மலையாகவும் உள்ளது.

இப்பகுதியில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் பக்தர்கள் வந்த வாகனங்கள் நிறுத்தப்படும் உப்புபாறை உள்ளது. புல்மேட்டில் இருந்து உப்பு பாறைக்கு வருவதற்கு சிறிது தூரம் ஒற்றையடி பாதையும், மீதி தூரம் ஜீப் பாதையும் உள்ளது. புல்மேட்டில் மகரஜோதியை தரிசனம் செய்த பின், லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உப்புபாறைக்கு வருவது தான் பிரச்னை. ஜன.14ல் மகரஜோதி தரிசனம் செய்ய புல்மேட்டில் 3 லட்சம் பக்தர்கள் இருந்துள்ளனர். உப்புபாறையில் பக்தர்கள் வந்த 2500 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்வித பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத இப்பகுதியில் அதிகமான வாகனங்களும், லட்சக்கணக்கான பக்தர்களும் எப்படிவந்தார்கள். வண்டிப்பெரியாரில் இருந்து புல்மேடு வருவதற்கு இடையில் வள்ளக்கடவில் வனத்துறை செக்போஸ்ட் உள்ளது. இங்கு ஜீப், கார்களுக்கு நுழைவுக்கட்டணமாக 50 ரூபாயும், மினிபஸ்களுக்கு 100 ரூபாயும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக 1700 வாகனங்களிடமிருந்து நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர நுழைவுக்கட்டணம் வாங்காமல் 800 வாகனங்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. 2500 வாகனங்கள் உப்புபாறையில் நிறுத்துவதற்கான வசதியுள்ளதா?அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப் பட்டுள்ளதா என்றே தெரியாமல் எப்படி இத்தனை வாகனங்களுக்கும் வனத்துறை அனுமதி கொடுத்தது? அப்பகுதியில் முகாமிட்டுள்ள அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் ஜெனரேட்டர் மூலம் வைத்துள்ள விளக்கைத் தவிர மற்ற எவ்வித லைட் வசதியும் அங்கு கிடையாது. இச்சூழ்நிலையில் மகரஜோதி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் அனைவரும் எப்படி ஒரே நேரத்தில் திரும்ப முடியும். இவ்வளவு பக்தர்களும், வாகனங்களும் புல்மேடு பகுதியில் இருக்கும் போது ஐந்து போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்ததை எப்படி ஏற்க முடியும்.

கேரளாவின் குரல் :

*கடனப்பள்ளி ராமச்சந்திரன், கேரள தேவசம்போர்டு அமைச்சர்: சபரிமலை, பம்பை, எரிமேலி போன்ற இடங்களில் செய்ய வேண்டிய பணிகளுக்கான மாஸ்டர் பிளானை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புல்மேடு சம்பவம் பற்றி விசாரணை நடத்தும் கமிஷன் தரும் அறிக்கை அப்படியே போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு செய்யும்.

*கே. ஜெயக்குமார், சபரிமலை உயர் மட்டக்குழு தலைவர்: புல்மேடு மட்டுமல்ல மகரஜோதி தெரியும் பிற இடங்களிலும் முழு வீச்சில் பாதுகாப்பு செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து பாதுகாப்பு சாத்தியம் இல்லாத இடங்களில் ஜோதி தரிசனம் நடத்த அனுமதிக்க கூடாது. நிலக்கல்லில் இருந்து பக்தர்களை ஒவ்வொரு கட்டமாக அனுப்ப வேண்டும்.

*சி.பி. நாயர், முன்னாள் கேரள தலைமை செயலாளர்: ஏராளமானோர் பல நாட்கள் சபரிமலையில் தங்குகின்றனர். வருமானத்துக்காக தேவசம்போர்டும் இதை கண்டு கொள்வதில்லை. தரிசனம், நெய்யபிஷேகம் முடிந்தவுடன் எந்த பக்தரையும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக்கூடாது. குருவாயூர் போல சபரிமலை நிர்வாகத்துக்கு தனி அமைப்பு உருவாக்க வேண்டும். சபரிமலை பற்றி ஐப்பசி மாதம்தான் அரசு சிந்திக்கிறது. திருப்பதியில் ஆந்திர அரசும், நவராத்திரி விழாவில் கர்நாடக அரசும் காட்டும் அக்கறை கேரள அரசு சபரிமலையில் காட்டுவதில்லை.

*ராமன்நாயர், முன்னாள் தலைவர், திருவிதாங்கூர் தேவசம்போர்டு: புல்மேடு போன்ற இடங்களையும் மாஸ்டர் பிளானில் கொண்டு வரவேண்டும். புல்மேடு, அட்டத்தோடு, ஹில்டாப், பருந்துப்பாறை போன்ற இடங்களை இடையில் தங்கும் இடங்களாக மாற்ற வேண்டும். பக்தர்களுக்கு தேவையான இடங்களை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இருந்து மாற்றம் செய்து தேவசம்போர்டு பெற வேண்டும்.

*கும்மனம் ராஜசேகரன், கேரள இந்து இயக்க ஒருங்கிணைப்பாளர்: சபரிமலையை தேசிய புண்ணிய ஸ்தலமாக அறிவிப்பதன் மூலமாக மட்டும்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். சபரிமலையை சுற்றி 100 கி.மீ. சுற்றளவு நிலத்தை பக்தர்களுக்காக ஒதுக்கி அங்கு தேவையான வசதிகள் செய்ய வேண்டும். சபரிமலை பணிகளில் இந்து இயக்கங்களின் கருத்துக்களைபரிசீலிக்க வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் சொல்வது என்ன?

ஸ்ரீதர், அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாநில இணைசெயலாளர்: திருப்பதி போல் கியூ காம்ப்ளக்ஸ் கட்ட வேண்டும். கேன்டீன் வசதியும், கழிப்பிட வசதியும் அதில் ஏற்படுத்தித்தர வேண்டும். அதேபோல், 18ம் படி ஏறியவுடன் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யத்தான் நினைப்பர். அவ்வாறு நெய் அபிஷேகம் செய்தவர்களும், தரிசனம் பார்த்தவர்களும் மீண்டும் கோவில் உள்ளே வராதவண்ணம் பாதை அமைக்கவேண்டும். சபரிமலை முழுவதும் கழிவுகளின் நாற்றம் அடிக்கிறது. கழிப்பறைகளை பயன்படுத்த சீசன் நேரத்தில் 10 ரூபாய் வரையிலும் வசூலிக்கின்றனர். திருப்பதி போல் இங்கும் தேவஸ்தானமே கழிப்பிடங்களை கட்டி இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கலாம்.

நடராஜன், சேலம் ஐயப்ப ஆஸ்ரமத் தலைவர்: பம்பா, புல்மேடு பகுதிகளை முதல் கட்டமாக இரண்டு வழிப் பாதையாக, முடிந்தால் நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். தொண்டு நிறுவனங்கள் சார்பில், உதவி மையங்கள் ஏற்படுத்தி, தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பக்தர்களுக்கு வழிகாட்டுவதுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். மாதம் தோறும் ஐந்து நாள் மட்டுமே திறக்கப்படும் கோவில் நடையை, பத்து நாட்களோ அல்லது 20 நாட்களோ திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 18ம் படியில் அதிகபட்சம் மூன்று பேர் மட்டுமே ஏற முடிகிறது. தேவஸ்தானம் பிரசன்னம் பார்த்து, சுவாமியின் உத்தரவு பெற்று 18 படிகளையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் விரிவுப்படுத்தலாம்.

சீத்தாராமன், சேலம் தர்ம சாஸ்தா ஐயப்ப ஆஸ்ரம நிர்வாகி : புல்மேடு பாதையில் பக்தர்களுக்கு விளக்கு வசதி, ரோட்டை விரிவு படுத்துதல், தங்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஜீப் உள்ளிட்ட எளிதில் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களை அனுமதிக்க கூடாது.

எம்.ராமமூர்த்தி, சந்தன குருநாதர் ஐயப்ப சேவா சங்கம், மானாமதுரை: கடந்த 28 ஆண்டுகளாக பெருவழிப்பாதையில், 160 சாமிகள் என்னுடன் வருகின்றனர். இந்த ஆண்டு அழுதாமலை ஏற்றத்தில் தற்காலிக கடை வைத்திருக்கும் வியாபாரிகள், நாங்கள் வழக்கமாக தங்கும் இடத்தை ஆக்கிரமித்து கொண்டனர். வாடகையாக 30 ச.அடிக்கு 2,000 ரூபாய் கேட்டனர். வியாபாரிகளுக்கு வனத்துறை, போலீசார் ஆதரவளிக்கின்றனர். அழுதா மலை, கரிமலை உள்ளிட்ட பெருவழிப்பாதையில் பக்தர்கள் தங்க வசதி செய்ய வேண்டும்.

கணேசன், ஐயப்ப சேவா சங்க தேனி மாவட்ட துணை செயலாளர்: மகரஜோதி தரிசனத்தன்று வண்டிப்பெரியாறில் இருந்து புல்மேட்டிற்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீப்புகளில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். புல்மேட்டில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள கோழிகானம் வரை மட்டுமே ஜீப்புகள் அனுமதிக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு புல்மேட்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். தரிசனம் முடிந்ததும் ஒட்டுமொத்த கூட்டமும் மிகவும் குறுகலான கும்மிருட்டுப் பாதையில் வெளியேறுவதற்காக முண்டியடித்தனர். புல்மேட்டில் இருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் வழித்தடத்தின் குறுக்கே ஜீப் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை கடந்து செல்லும்போது தான் பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர்.

சின்மயா சோமசுந்தரம், விஸ்வ இந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர்: திருப்பதிக்கு தினமும் பல லட்சம் பக்தர்கள் செல்கின்றனர். அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்ல முறையில் உள்ளது. தமிழக ஐயப்ப பக்தர்களால் கேரள அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. எனினும், பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னேற்பாடுகள் செய்யவில்லை.

சனி, 8 ஜனவரி, 2011

அய்யப்பன் கோவில்

அய்யப்பன் கோவில்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முன்றாம் வருட கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது

பவானி அய்யப்பன் கோவிலில்  
மூன்றாம் வருட கும்பாபிசேகம்
 
கண் கவரும் அலங்காரத்துடன் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெற்றனர், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.